Wednesday, February 17, 2010

அம்மா நினைவிருக்கோ...

தொந்தி தொகை வளர்த்து
தொப்பையை மறைத்துக் கட்டி
அந்திப் பெரும் பொழுதில்
சிந்தியெனை பெற்றவளே
சின்ன மகன் நானிருக்கேன்
சிறிதேனும் நினைவிருக்கோ...

முற்றத்து றோசப் பூ
முள்ளென்னை குற்றிவிட
சுற்றத்து ‘டாக்டர்கள்’
சூழ்ந்தென்னை தொல்லையிட
பக்கத்தில் நீயிருந்து பதைபதைத்த
பருவமேனும் நினைவிருக்கோ...

பள்ளி போன இளையமகன்
பகலில் வரக் காணலேன்னு
சுள்ளி வாத்தியாரை
சுழல வைத்த சூறாவளி
உன்னருமை மகனிருக்கேன்
உறவேனும் நினைவிருக்கோ...

அடுக்களைக்குள் நான் நுழைந்து
சடுக்கென்று உடைக்கும்போது
விடுக்கென்று பறிக்கின்ற – உன்
வீரத்தில் நனைந்த எந்தன்
மடத்தனங்கள் நினைவிருக்கோ- மகனின்
மறுவுருவம் நினைவிருக்கோ...

தந்தைக்கு தலை மகனும்
தாய்க்கு கடை மகனும்
கொள்ளி வைக்க வேணுமென்னு
சொல்லி வைத்த வேதியர்கள்
கிள்ளியேனும் என்னுயிரை கருவறையில்
தள்ளி வைக்க முடியலையே...

சும்மா நினைவுக் கெண்டு
சோடியா எடுத்த படம்
சுவத்தோரம் மாட்டி விட்டா
சுழல் காற்றில் போகுமெண்டு
அம்மா நான் நினைக்கலையே- உன்
அடி வயிறு நோகுமெண்டு...

சூது செய்யும் காதலெனை
பாது செய்யப் போகுதெண்டு
சாது சொன்ன சேதிகேட்டு
சரியா நீ பேசலையே -இப்ப
மாலை போட்டு புகைப்படத்தில்
மண மகனாய் பாக்கிறியே!

No comments:

Post a Comment