Tuesday, March 23, 2010

தலைப்பு தடம் புரண்ட மடல்

பருக வருவோர்க்கு
பஞ்சமின்றி –
பாதீடு கொடுத்தவள் நீ...

கலவியில் கள்வரையும்
உயிர் பிரிதல் -
வெல்வோரையும்
உறங்க வைத்தவள் நான்...

ஊரார் உன்னை உரசியபோதும்
உலுக்கியுனை எடுத்தபோதும்
‘போ’ என்று சொல்லாமல்
பொறுப்பாய் நின்றவள் நீ...

எனக்கோ –
சாய்ந்து படுக்கவும் முடியலை
பாய்ந்து அதை -
தடுக்கவும் முடியலை

இருந்தும் -
தேய்மானம் இன்றி
தேய்ந்து கொடுத்தோம்
வருமானம் இன்றி
வாடகைக்கு விடப்பட்டோம்...

இப்போ –
சுருட்டி எனை எடுத்து
சுடுகாட்டில் போட்டுவிட்டான்
சுனை கெட்ட என் சீமான்

அதனால்,
நடுத்தெருவில் நாயாய்
நனைந்து கொண்டிருக்கின்றேன்.

தங்கையே-
போதும் உன்
பொதுப் பணி
அக்கா நான் சொல்கிறேன் கேள்...

அன்புள்ள
‘ஆவுரேஞ்சு கல்’லுக்கு
அக்கா ‘பாய்’ எழுதும்
பரிதாப மடல்.

Wednesday, March 17, 2010

உன்னோடு வாழ்கிறேன்

அகராதியே!
உனை நான் அறிந்திராவிட்டால்
உலக இலக்கண வழக்கு
எனக்கு பிணக்கு ஆகியிருக்கும்.

கவிதையே!
உனை எழுதுவதற்கு
சரணங்கள் -
சதி செய்திருக்கும்
பல்லவிகள் -
பகிடிவதையில் புகுந்திருக்கும்
முற்றத்து முல்லையும்
முழுகாமல் இருந்திருக்கும்.

அறிவகமே!
உன் மூச்சுக் காற்று
என்னோடு முக்குளிக்கும்போது
நான் தத்தளிக்கிறேன்.

களஞ்சியமே!
நிறையவே உன்னை வாசிக்கிறேன்
உயிரளவும் நேசிக்கிறேன்.

ஒற்றையாய் என் ஆன்மா
பற்றையாய் உன்னை நேசிப்பதால்
கைக்கிளையில் -
கவிதை செய்கிறேன்
கானல் நீரில்
தெப்பம் விடுகிறேன்.

சிருஷ்டியின் முதற்பொருளே
அதன் கருவும், உரியும்
நீயாகும்போது
தலையங்கம் மட்டும் என்ன
தலை தட்டுமா?

ஓ... கவிஞர்களே!
உங்கள் படைப்புக்களை
படிக்கும் போது
நான் நினைக்கவில்லை
நானும் நீங்கள் தான் என்று..

என்னுள் உறைந்த
உதிரத்துளியே
இறுதியாக ஒன்று
உன்னிடம் கேட்கிறேன்...

என் உயிர் மூச்சு என்னை
முட்டும்போதும் -
பயிர் காச்சு விதை
கொட்டும்போதும் -
பக்கத்தில் நீயிருந்து
பால் பழம் பருக்க வேண்டும்
பாவி உயிர் அப்போ
பாரை விட்டு பிரிய வேண்டும்
செய்வாயா...?

Friday, March 5, 2010

ஏன்டிபுள்ள பொங்கவைச்சே..

தெற்குத்தென் தெருவோரம்
தேங்காய்கள் விக்கேக்க
பாக்கிலே சுண்ணாம்பு
பக்குவமா சொதப்பேக்க
நாக்கிலே சிவப்பதுபோல்
நனயவந்து நின்றவளே
பருவமும் அறியாம
ஏன்டீபுள்ள பொங்கவைச்சே...

எழவுவிழுந் தவீட்டில்
சலவைக்கே சுரண்டேக்கை
செலவுக்கு என்னபண்ண
உணவுக்கே உதைக்கிறது
களவுக்கு போய்வரவா?
கழுத்திலே சுருக்கிடவா?
எழவுக்குப் பிறந்தவளே
ஏன்டீபுள்ள பொங்கவைச்சா

அப்பனாத்தா இருந்திருந்தா
ஆளுக்கொரு தேருகட்டி
ஆரவாரம் செய்திருப்பா
ஆலத்தி எடுத்திருப்பா
பொங்கல்வைக்க போறனெண்டு
பொருட்டும் சொல்லாமல்
புறத்தாலே போகேக்க
ஏன்டீபுள்ள பொங்கவைச்சே...

பத்துவய சிற்கேபுள்ள
பன்னிரண்டு நாளிருக்க
என்னபுள்ள பண்ணிவைச்சே
என்னத்திற்கு கொள்ளிவைச்சா
பொங்கவைக் கப்போறனெண்டு
சொல்லிவைக்க கூடவில்லை
இந்தச்சீக் கிரத்தில்
ஏன்டீபுள்ள பொங்கவைச்சே...

குந்திமக பேழையிலே
முந்தியனுப் பிவைச்சா- இது
பிந்திடிச்சே என்னசெய்ய
பிறப்பொண்டு ஒட்டிச்சே
அந்திகரு கையிலே
ஆருக்கும் தெரியாம
சீக்கிரம அனுப்பி வைச்ச
சிவனேண்டு போயிடுவா

அன்புள்ள எதிரிக்கு...

யன்னலோர மின்னலாய்
பின்னலோடு வந்தவளே
அந்தியிலே சந்திரன்போல்
சந்தியிலே மறைந்தவளே
வம்பான எதிரியென
பண்பாக பெயரெடுத்த
தெம்பான எதிரிக்கு - எனது
அன்பான வணக்கங்கள்

பருதியின் பாகத்தில்
பாற்கடலின் வேகத்தில்
கரைபுரண்டு வந்தவளே
நுரைபுரண்டு போனவளே
பாதிலிலே போனாலும் - நான்
பதைபதைத்து நின்றாலும்
பண்பான எதிரிக்கு
பல்லாண்டு வணக்கங்கள்

கவியேதா கமென்றாய்
கலங்கரையே விளக்கென்றாய்
புவியேமா றுமென்றாய்
பெருக்கெடுத்துப் போகுமென்றாய்
திதியே மாறினும் - என்
மதியென்றும் மாறாதென்றாய்
அடியேய்நான் நினைக்கலையே –உன்
இடிமனசு மாறுமெண்டு

இராப்பூமல ரும்போது
விறைப்பு இருக்குமென
சிறப்பாய் கொணரந்தேன்
மரப்பாய் உனக்கெண்டு
மறுப்பாய் நீசொன்னாய்
தரைப்பாய் போதுமென – நான்
வெறுப்பாய்நினைத் ததில்லை –வாழ்வு
கறுப்பாய்போ குமெண்டு....