Sunday, December 20, 2009

பயணங்கள் தொடரும்…

அன்றொரு நாள் அந்திவான இன்பொழுதில்

அரவமே இல்லாத சில் குளிரில்

ரயிலுக்காய் காத்திருந்தேன்; விழிகள் சேர்த்து

ரண தூரம் கடந்துவந்து ஏறிடவே

பக்கத்து சீட்டில் பஞ்சாமிர்தம்; என்னை

பார்த்து சிலிர்த்தது புன்னகையில்


யாப்பு இலக்கணம் உடைத்தெறிந்தேன்; கவிதை

சாக்கில் எதுகை மோனை எதற்கென்று

மோனை எதுகை திரிந்திடவே; சாட்டில்

பானையை திறந்து பழரசம் பருக

தளை சீர் நினைத்து தடுமாறினேன்

தவணைகள் கேட்டு கவிதை உரையாடினேன்


உம்…மென்றாள்; தாமதம் எதற்கென்றாள்

‘கம்’… என்றேன் தருகிறேன் இப்பவென்றாள்

கொடுக்க நினைத்து; கடுக்க வாங்கினேன்

சிடுக்க அவள் குழந்தையை; அடுத்த

பக்கத்தில் அவள் புருஷன் - சிரிக்க

பத்திரமாய் பாருங்கோ என்குழந்தை யென்றாள்.

Thursday, December 17, 2009

சீர்வரிசை...

புன்னை மர நிழலே!
பூக்களின் இளந் தளிரே!
தன்னந் தனி மையிலே
தாமரைப் பூச் சோலையிலே

அள்ளி யுனை யெடுத்து
அர வணைத்து முத்தமிட
உனை யின்று எனக்களித்த
உங்கப்பன் என் மாமன்
செய்த தவம் என்னவென்று
செப்பு புள்ள வாய்திறந்து

பஞ்சனையில் நான மர்ந்து
பாடிவார மூன்றாம் பால்
மஞ்ச லிலே நீராடி
மரகத மாய் வந்தவளே!

புன்னகையை சீதன மாய்
பூண்டு இங்கு வந்தவளே!
பொன் நகையை வீசியெறி –அது
பெறுமோ உன் சுள்ளிடையில்.

மாட்டுக்கு சீதன மாய்
மணியொன்று கட்டுபவர் - என்
பாட்டுக்கு சீதன மாய்
பாரதியை தருவாரே?

சீதனமும் நான் பெற்ற
சிந்தனையும் உன் அறிவும்
போதுமடி எனக் கிந்த
பொன்னான சீர் வரிசை!

Wednesday, December 16, 2009

விழித்திடு மனிதா!

ஆறறிவு மனித உனக்கு
பேரறிவா!
ஓரறிவு கூட இல்லை – வெறும்
சேறறிவு!

காட்டில் என்ன தேடுகிறாய் மனித
பாட்டையா – அதை
நோட்டில் தேடு
வீட்டில் தேடினால்
விரைவில் கிடைக்கும்
உனக்கு பைத்திய ‘வார்ட்டு’!

விட்டிலைப் பார் - அது
குதிக்கிறது மகிழ்ந்து
விளக்கு எண்ணெயில்,
உயிர் போகுமன அறியாமல்….

மனிதா!
பட்டாம் பூச்சியாயிரு
சிட்டாக
தட்டாத உயரத்தில் - சந்தோஷ
சரித்திரம் எழுதி
தன்வாழ்வு எட்டு நாளென அறியாமல் ….

ஈசல் பாடுகிறது சிந்து
பூசலோடு வெளிச்சத்தில்
ஒரு நாள் கழியுமுன்னர்.
அது அறிந்திருக்கவில்லை
தன் வாழ்வு இருபத்தி நான்கு
மணிகள் என்று…..


அதுதான் சொல்கிறேன்
விளித்திடு மனிதா!
இன்று முதல் பணியிருக்கு…

Monday, December 14, 2009

தமிழ்

அல்லித் தாமரையாய்
அழகான தேனிலாவாய்
உள்ளத்தில் நீயிருக்க
ஊணுறக்கம் தோணலையே!

பள்ளிப் பருவத்தில்
பாவையுன் யுவருவத்தில்
துள்ளிக் குதித்ததுவும்...
தூங்காமல் விழித்ததுவும்...

கன்னி நீசெய்ய
காதலினை நினைத்துவிடில்
நெஞ்சம் நொகிழுதடி
நொருங்காமல் வெடிக்குதடி!

பல்லாண்டு யான்செய்ய
பாவிக் காதல்தனை
பொல்லாத எதிரியவன்
‘பொம்பர்’தனில் தான்வந்து
சில்லாட வைத்துவிட்டான்
தள்ளாடும் வாழ்வுதனை.

என்நாளும் யெனையாளும்
என்னுயிரே தமிழ்தாயே!
பந்தாடி யெதிரிகளை
பாடையிலே அனுப்பிவிட
படையெடுத்து வருகின்றேன்....!

லண்டன் காசு!


வாடிய மல்லிகை மலரிதழ் போல

ஆடியே அன்னார் வாழ்வும் கழிந்தது

தேடிய சொந்த பந்தங்கள் ளெல்லாம்

ஓடியே நின்று வேடிக்கை பார்க்குது!


தாலியே கட்டி யாணைதிட்ட தாரமும்

தவறாக எண்ணியே தொலைந் தோடிப்போனது

தவம்பல செய்து பெற்றவை லண்டன்போய்

தவறாது காசினை தரமாக அனுப்புது.நாதியற்று நனாதையாய் கிடக்குது பிணமிங்கு

போடடா போடு கொள்ளியை போடு!

ஊரா, உறவா, அண்ணா, தம்பியா?

போட்டால் கிடைக்குது லண்டன் காசு!!

Sunday, December 6, 2009

ஐந்தாவது ஆண்டில் ….!வானம்விழ, இடிமுழங்க தானை கொண்டு
வாரிஎழும் கடலலைகள் கூத்திட் டாட
கானமிடம் மயிலினங்கள் கரைந்து ஓட
கங்கையிலே செங்கைமலர் உயிர் திறக்க
விண்டிலர்கள் சண்டியர்கள் வெகுண் டொளிக்க
விட்டிலானோம், விட்டையானோம், அன்று நாட்டில்
சுனாமி அரக்கன் சுமந்து வந்தான் வையநீரை
சூனியமாக, உயிர்கள் என்னவென்பேன் ஐயய்யோ!


வடக்கென்று கிழக்கென்று பார்த்திடா மல்
வஞ்சனைகள் தீர்த்தவுந்தன் திறந்தான் னென்ன
அடுக்களையில் சமயலுடன் அள்ளிச் சென்றாய்
ஆருயிர்கள் உன்கிழைத்த அநீதி யென்ன
இடுக்கண்நீ செய்தவைகள் ஐந்து ஆண்டில்
இறுக்கிறது, புடைக்கிறது, நனைக்கிறது – என்
நெஞ்சத்தை துளைக்கிறது என்ன செய்வேன்
கொஞ்சத்தை நீ விடவுமில்லை ஐயய்யோ!

Thursday, December 3, 2009

யுத்தங்கள் ஓய்வதில்லை!

கல்லறைகள் மீது வேதங்கள் ஓதப்பட்டன

அன்று ...


இன்று ....

கல்லறைகளே வேதங்கள் ஆகிவிட்டன

பிணங்களின் வருகையின்றி...!


ஆனால், நடக்கிறது கல்லறை யுத்தம்

முதலில் செத்தவன் யார் என்று ......!