Tuesday, August 18, 2009

அகதி முகாமில்…...


ஆடைக்குள் உடல் மறைத்து
பாவாடைக்குள் இடை குளித்து
சாடைக்கு குடை பிடித்தாயன்று.

வாடைக்கு இடையுமில்லை -பெண்
யாடைக்கு நடையுமில்லை – சா
வாடைக்கு தடையுமில்லை இன்று.

பாடைக்கு சொல்லிவிடு - முகாமில்
பீடைக்கு மழை வருது - –உயிர்
தாடைக்கு மேல்வருது என்று...

Friday, August 14, 2009

மாற்றி விடு

வேசத்தை மாற்றி விடு – கடும்
மோசத்தை தாழ்த்தி விடு
தேசத்தை வென்றிடவே – உந்தன்
நேசத்தை பாய்ச்சி விடு.

சிந்தித்துச் செயலாற்று – சில
சிந்தனை களை வீசு
தூசித்து நீ திரியும் - அந்த
செயல்களை மாற்றிடு.

வாசித்து நீ நடந்தால் - உலகம்
பூசித்து வாழ்த்துமடா
யாசித் திருக்கையிலே –உந்தன்
யோசனை தீருமடா.

தந்தந்தை நீக்கிவிடு – பாச
பந்தத்தை போக்கிவிடு
சொந்தத்தை யுருவாக்கு – நாட்டில்
சுதந்திரம் தனை மூட்டு.

மண்ணுக்கியாகு முடலை - இனிய
பண்ணுக்கு உரமாக்கு
எண்ணை என்னுகையில் - நல்
எண்ணையாய் ஆகிவிடு.

Wednesday, August 12, 2009

மானம் இல்லை போடா!

நாட்டில் சண்டை போச்சு - இப்ப
காட்டில் சண்டை யாச்சு
பாட்டில் சண்டை யெல்லாம் - இப்போ
மாட்டுச் சண்டை யாச்சு!

வீட்டில் சண்டை யில்லை - இங்கு
வீரர் சண்டை யில்லை
போட்டிச் சண்டை யுண்டு – உன்னை
போடும் சண்டை யுண்டு!

ரோட்டுச் சண்டை யுண்டு - இப்போ
ரொக்கச் சண்டை உண்டு
ரோந்து போகும் உன்னை - இப்போ
மாய்ந்து போக்கும் சண்டை!

நீதி சொல்ல வந்தார் - வெள்ளை
நித்தி யங்கள் பெற்றார்
நீந்தக் கற்றுக் கொடுத்தால் - நீயோ
மாளக் கற்கி றாயே!

காட்டிக் கொடுத்தும் வாழ்வாய் - உன்னை
கூட்டிக் கொடுத்தும் வாழ்வாய்
மாட்டிக் கொடுக்க வென்றால் - உன்னை
காட்ட யாரு முண்டோ!

கப்ப லேறி னாயே – அன்று
கடலைத் தாண்டி னாயே
கப்பம் பெற்று நாட்டை – என்றும்
குற்ற மற்று ஆண்டாய்!

தானை வளர்க் கிறாயா -இன்று
பூனை வளர்க் கிறாயா – கவரி
மானை வளர் திட்டாலும் - உனக்கு
மானம் இல்லை போடா!

Tuesday, August 11, 2009

சுனாமி எச்சரிக்கை!

இந்து சமுத்திரத்தில் அந்தமான் தீவுக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியை அண்டி கடற்பரப்பில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தினால் இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்த சமுத்திரத்தின் அந்தமான் தீவுக்கு அருகில் இன்று அதிகாலை (11.08.2009) 1.25 அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்ததாக இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் அறிவித்திருந்தன.

இதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஒன்றினையும் அந்த நாடுகள் விடுத்திருந்தன. (குறிப்பாக இந்தியா மற்றும் பங்களாதேஷ்) இதனை தொடந்து இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி எச்சரிக்கை மையம் ‘சம்பிரதாய ரீதியாக’ தனது பங்கிற்கு பணியினை செய்திருந்து; ஆனால் சற்று தாமதித்து!

இலங்கையின் முதலாவது எச்சரிக்கை இன்று அதிகாலை 2 மணியளவில் விடுக்கப்பட்டது. அது எச்சரிக்கையாக அல்ல தகவலாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எமது ஊடகமும் அடங்கலாக.

இதனை தொடர்ந்து ‘தடல் புடலாக’ இரண்டாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டது அதிகாலை 2.35 அளவில்! அதில் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கையுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இந்து சமுத்திர பிரந்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்து 1 மணித்தியாலம் 10 நிமிடங்கள் பின்னர்!

ஆனால் இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்படும்போது இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் தமது சுனாமி எச்சரிக்கையினை வாபஸ் பெற்றிருந்தமைதான் வேடிக்கை!
அதன் பின்னர் நாம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி எச்சரிக்கை நிலையத்தினை தொடர்பு கொண்டபோது அதற்கு ‘சலாப்பல்களான’ பதில்கள் கிடைத்தன.

இதன் மூலமாக ஒன்றனை நாம் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கை சுனாமி எச்சரிக்கை மையம் சுயமாக செயற்றடவில்லையென்பதனையும் தொழில் நுட்பம் மற்றும் முன்கூட்டிய அறிவித்தலை விடுக்கும் திறன் இலங்கை வளிமண்டலயவில் திணைக்களத்திடம் இல்லை என்பதனையும்! உயிர்களின் போராட்டமான இந்த எச்சரிக்கை தொடர்பில் இந்த மையம் போதிய கவனம் எடுத்ததாக தெரிவியவில்லை. ‘இன்னொரு சுனாமி வரட்டும் மனித உயிர்களை காவு கொள்ளட்டும்’ அப்போதாவது புரிகிறதா பார்போம் உயிர்களின் விலைகள் மலிவு அல்ல என்று!