Wednesday, February 17, 2010

அம்மா நினைவிருக்கோ...

தொந்தி தொகை வளர்த்து
தொப்பையை மறைத்துக் கட்டி
அந்திப் பெரும் பொழுதில்
சிந்தியெனை பெற்றவளே
சின்ன மகன் நானிருக்கேன்
சிறிதேனும் நினைவிருக்கோ...

முற்றத்து றோசப் பூ
முள்ளென்னை குற்றிவிட
சுற்றத்து ‘டாக்டர்கள்’
சூழ்ந்தென்னை தொல்லையிட
பக்கத்தில் நீயிருந்து பதைபதைத்த
பருவமேனும் நினைவிருக்கோ...

பள்ளி போன இளையமகன்
பகலில் வரக் காணலேன்னு
சுள்ளி வாத்தியாரை
சுழல வைத்த சூறாவளி
உன்னருமை மகனிருக்கேன்
உறவேனும் நினைவிருக்கோ...

அடுக்களைக்குள் நான் நுழைந்து
சடுக்கென்று உடைக்கும்போது
விடுக்கென்று பறிக்கின்ற – உன்
வீரத்தில் நனைந்த எந்தன்
மடத்தனங்கள் நினைவிருக்கோ- மகனின்
மறுவுருவம் நினைவிருக்கோ...

தந்தைக்கு தலை மகனும்
தாய்க்கு கடை மகனும்
கொள்ளி வைக்க வேணுமென்னு
சொல்லி வைத்த வேதியர்கள்
கிள்ளியேனும் என்னுயிரை கருவறையில்
தள்ளி வைக்க முடியலையே...

சும்மா நினைவுக் கெண்டு
சோடியா எடுத்த படம்
சுவத்தோரம் மாட்டி விட்டா
சுழல் காற்றில் போகுமெண்டு
அம்மா நான் நினைக்கலையே- உன்
அடி வயிறு நோகுமெண்டு...

சூது செய்யும் காதலெனை
பாது செய்யப் போகுதெண்டு
சாது சொன்ன சேதிகேட்டு
சரியா நீ பேசலையே -இப்ப
மாலை போட்டு புகைப்படத்தில்
மண மகனாய் பாக்கிறியே!

Friday, February 12, 2010

யாழ்ப்பாணம்

நாகர் வீரத்தின் நரம்புகளும் - மறவர்
நறுமணம் வீசும் தழும்புகளும்
நூங்கு மரத்தின் குழம்புகளும் - முது
நூலோர் முறுக்கிய பிரம்புகளும்
தேங்கிக் கிடக்கும் யாழ்ப்பாணம் - அது
திராவிட இனத்தின் தேன்பானம்.

காதலர் குலாவும் ‘கஜுனா’கடலோரம் - மான்
மாதுகள் நீராடும்கீரி மலையோரம்
ஆழ்வளம் பொழில் நிலாவரையும் - பல
அன்னியர் வியக்கும் அதிசயமும்
மான், மரை கொண்டது யாழ்ப்பாணம் - தமிழ்
மானம் காத்ததும் யாழ்ப்பாணம்.

அண்டி வளர்த்த எம்பூமி - இன்று
மண்டிக் கிடக்குது ஏன்சாமி
சுண்டி விதைக்கும் நெல்மணிகள் - வெடி
கண்டு கிடக்குது பிணபூமி
குண்டடி பட்டதும் யாழ்ப்பாணம் - ஷெல்
எண்டு படுத்ததும் யாழ்ப்பாணம்.

நஞ்சு படர்ந்து போனதனால் - விதி
விஞ்சும் வீரர் மடிந்ததனால்
தென் மன்னவர் செய்சதியதனால் - சிக்கி
சின்னா பின்னமா னதனால்
மதிப்பை இழந்தது யாழ்ப்பாணம் -மறு
பதிப்பை எடுக்குமா யாழ்ப்பாணம்.

Tuesday, February 9, 2010

பாட்டோடு பட்டம்

முந்தநாள் முளைச்ச நெல்லு
மூன்று இலை போடுமென்று
சொல்லி வைத்த வேதியர்கள்
சாத்தி ரங்கள் படித்தவக...

வீட்டோடு பிறந்த பிள்ளை
வீணாகிப் போகு மெண்டு
காதோரம் சொல்லி வைச்ச
கதையை நான் சொல்லிடவா...

எங்கம்மா பிறந்த போது
எதிரி யெண்டு சொன்னவக
அவபிள்ளை நான் பிறக்க
அரி வாளை எடுத்தவக...

ரோட்டோரம் போகும் போது
ரொம்பத் தான் இதழ்ந்தவக
வீட்டோரம் போகும் போது
விரட்டி யெனை அடிச்சவக...

ஏட்டோடு போன மகன்
பாட்டோடு வருனா ணெண்டு
வீட்டோரம் சொல்லி வைக்க
விச ரெண்டு சொன்னவக...

பாட்டோடு பட்டம் வர
பாரதியா ரெண்டு சொல்லி
வீட்டோடு வர வழைத்து
விருந் துண்ணக் கொடுக்குதுக.

தலை வாழை இலைபோட்டு
தலை மாமன் மகள்மாரும்
தவறாது கொடுக்க வெண்டு
தரமாக சமைக் குதுக.

Saturday, February 6, 2010

செம் ‘பா’ கொண்டு வெல்வேன்

தாயென்னை பெற்றெடுத்து விட்டாள் - செந்
தமிழ் தன்னை வளவென்று உலகில்
மன மென்னை விடவில்லை தினமும்
சினங் கொண்டு வளவென்று தமிழை...

யாரிங்கு வந்தாலும் செந் தமிழை
பாழ்கெட்டுப் போக விடுவேனா இடைநடுவில்
தீதென்றும் பாதென்றும் பாரேன் - அது
மாதென்ற போதினிலும் நான்கெட்டுப் போகேன்

உறவென்று வந்தாலும் பாரேன் -அது
விறகென்ற போதிலும் நான்கரிந்து போகேன்
திறவென்று வந்தாலும், மயிரென்று உயிரை
பறவென்று விடுவேன் மகிழ்வோடு அதனை

‘சா’ ஒன்று வந்தாலும் என்பின்னே
‘சோ’வென்று பெய்வேன் ‘பா’கொண்டு முன்னே
போவென்று சொன்னாலும் தமிழ்க்கண்ணை – நெஞ்சில்
வேல்கொண்டு காப்பேன் தோளோடு வுன்னை.

Tuesday, February 2, 2010

மனிதம் எங்கே இருக்கிறது...?

எதிரியும் பகைவனும்,
உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்
அணைத்துக் கொண்டனர்
கள்ளுக்கடையில்...

அமெரிக்காவும் ரஷ்யாவும்,
இஸ்ரேலும் பலஸ்தீனமும்
கைலாகு கொடுத்தன
மதுக்கடையில்...

இலையான்களும் காக்காக்களும்
சங்கமித்தன
சாக்கடையில்...

எலியும் பூனையும்
உறவாடின
அடுக்களையில்...

கிறிஸ்தவனும் இஸ்லாமியனும்
கை கோர்ப்பார்களா
ஜெருசலோமில்..!

இந்துவும் இஸ்லாமியனும்
அனைத்துக்கொள்வார்களா
மக்காவில்..!