Wednesday, March 17, 2010

உன்னோடு வாழ்கிறேன்

அகராதியே!
உனை நான் அறிந்திராவிட்டால்
உலக இலக்கண வழக்கு
எனக்கு பிணக்கு ஆகியிருக்கும்.

கவிதையே!
உனை எழுதுவதற்கு
சரணங்கள் -
சதி செய்திருக்கும்
பல்லவிகள் -
பகிடிவதையில் புகுந்திருக்கும்
முற்றத்து முல்லையும்
முழுகாமல் இருந்திருக்கும்.

அறிவகமே!
உன் மூச்சுக் காற்று
என்னோடு முக்குளிக்கும்போது
நான் தத்தளிக்கிறேன்.

களஞ்சியமே!
நிறையவே உன்னை வாசிக்கிறேன்
உயிரளவும் நேசிக்கிறேன்.

ஒற்றையாய் என் ஆன்மா
பற்றையாய் உன்னை நேசிப்பதால்
கைக்கிளையில் -
கவிதை செய்கிறேன்
கானல் நீரில்
தெப்பம் விடுகிறேன்.

சிருஷ்டியின் முதற்பொருளே
அதன் கருவும், உரியும்
நீயாகும்போது
தலையங்கம் மட்டும் என்ன
தலை தட்டுமா?

ஓ... கவிஞர்களே!
உங்கள் படைப்புக்களை
படிக்கும் போது
நான் நினைக்கவில்லை
நானும் நீங்கள் தான் என்று..

என்னுள் உறைந்த
உதிரத்துளியே
இறுதியாக ஒன்று
உன்னிடம் கேட்கிறேன்...

என் உயிர் மூச்சு என்னை
முட்டும்போதும் -
பயிர் காச்சு விதை
கொட்டும்போதும் -
பக்கத்தில் நீயிருந்து
பால் பழம் பருக்க வேண்டும்
பாவி உயிர் அப்போ
பாரை விட்டு பிரிய வேண்டும்
செய்வாயா...?

No comments:

Post a Comment