Wednesday, August 12, 2009

மானம் இல்லை போடா!

நாட்டில் சண்டை போச்சு - இப்ப
காட்டில் சண்டை யாச்சு
பாட்டில் சண்டை யெல்லாம் - இப்போ
மாட்டுச் சண்டை யாச்சு!

வீட்டில் சண்டை யில்லை - இங்கு
வீரர் சண்டை யில்லை
போட்டிச் சண்டை யுண்டு – உன்னை
போடும் சண்டை யுண்டு!

ரோட்டுச் சண்டை யுண்டு - இப்போ
ரொக்கச் சண்டை உண்டு
ரோந்து போகும் உன்னை - இப்போ
மாய்ந்து போக்கும் சண்டை!

நீதி சொல்ல வந்தார் - வெள்ளை
நித்தி யங்கள் பெற்றார்
நீந்தக் கற்றுக் கொடுத்தால் - நீயோ
மாளக் கற்கி றாயே!

காட்டிக் கொடுத்தும் வாழ்வாய் - உன்னை
கூட்டிக் கொடுத்தும் வாழ்வாய்
மாட்டிக் கொடுக்க வென்றால் - உன்னை
காட்ட யாரு முண்டோ!

கப்ப லேறி னாயே – அன்று
கடலைத் தாண்டி னாயே
கப்பம் பெற்று நாட்டை – என்றும்
குற்ற மற்று ஆண்டாய்!

தானை வளர்க் கிறாயா -இன்று
பூனை வளர்க் கிறாயா – கவரி
மானை வளர் திட்டாலும் - உனக்கு
மானம் இல்லை போடா!

No comments:

Post a Comment