Wednesday, October 14, 2009

குளிர் காய்கிறது தமிழகம்............?

தமிழக நாடாளுமன்றக் குழுவினரின் இலங்கை வருகை ஈழத்தமிழர்களின் வயிற்றில் பாலை வார்ப்பதற்கு பதிலாக புளியை கரைத்து வார்த்துள்ளதாக தகவல்.

கடந்த 10 ஆம் திகதி ஆரவாரம் இல்லாமல் இலங்கையில் காலடி பதித்த தமிழக நாடாளுமன்ற குழுவினரின் வருகையை அறிந்த இலங்கைத் தமிழினம் - அதிலும் வடபகுதி மக்கள் (இடம்பெயர்ந்து முகாங்களிலுள்ள மக்களும் கூட) தங்களுக்கு சாபவிமோசனம் அல்லது மறுவாழ்வு கிடைக்கப் போவதான சந்தோசத்தில் இருந்ததாக தெரிவிக்கிப்படுகிறது.

தமிழக நாடாளுமன்ற குழுவினர் இலங்கை வந்த அன்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஒன்றரை மணித்தியால கலந்துரையாடல் ஒன்றை நடத்திவிட்டு – நலம் விசாரித்துவிட்டு – இடம்பெயர்ந்துள்ள மக்களின் குறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு முன்பாக - ‘டாட்டா’ காட்டி விட்டு -கலந்துரையாடலை முடித்துக்கொண்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் தெரிவிக்கப்படுகிறது.

மறுநாள் அந்த குழுவினரின் வடபகுதிக்கான பயணம் ஆரம்பமாகியிருந்தது. அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான் மற்றும் டக்லஸ் தேவானந்தா ஆகியோருடன் அவர்கள் யாழ் சென்றிருந்தனர்.

கடந்த 11 ஆம் திகதி காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் சென்றடைந்திருந்த குழுவினர், யாழ். பொது நூலகத்தில் பொதுமக்களுடனான சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்ததுடன், யாழ் பல்கலைக்கழகம் மற்றும் வேலணையில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களையும் நண்பகல் 12 மணிக்குள் - இரு மணியத்தியாலயங்களுள் அனைத்தையும் முடித்துக்கொண்டு நோயாளிகளை பார்க்கச் செல்வதாக கூறிக்கொண்டு வவுனியா – மெனிக்பாம் முகாம் நோக்கி ஹெலிகொப்டரில் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

இதைத்தான் பின்னர் மலையக விஜயத்தின்போது D.R.பாலுவிடம் ஊடகவியலாளர் ஒருவர் “ நோயாளிகளை பார்க்க என இலங்கை வந்த நீங்கள் வடபகுதியில் இருக்காமல் நுவரெலியாவுக்கு சுற்றுலாவா வந்தீர்கள்” என கேட்டிருந்தார் ஆக்கும்.

அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும் நாம் மீண்டும் சம்பவத்திற்குவருவோம். வவுனியா – மெனிக்பாம் முகாமிற்கு அங்குள்ள மக்களை பார்க்கச் சென்ற விடயம் முகாமிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு இன்றுவரை தெரியாதாம். ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது கண்டுதான் இவ்வாறு ஒரு சம்பவம் நடந்துள்ளது என புரிந்துகொண்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முகாமிற்கான சிறிய சுற்றுலாவிற்கு நாடாளுமன்றக் குழுவினர் செலவிட்ட காலம் அதிகமல்ல, வெறும் ஒரு சில மணித்தியாலங்கள் தான் என ஊடக வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.

முகாம் சுற்றுலாவினை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய தமிழகக் குழுவினருக்கு 11 ஆம் திகதி அன்றிரவு மிகப்பெரிய விருந்துபசாரம் வழங்கப்பட்டதாகவும் தகவல்.
அன்றைய தின இரவையும் கொழும்பில் கழித்த குழுவினர், மறுநாள்; இரவு அதாவது 12 ஆம் திகதி ‘எழில் கொஞ்சும் பொழில் நாடாம்’ மலையகத்திற்கு அமைச்சர் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவினருடன் சென்றிருந்தனர்.


மலையகத்தில் மட்டும் அந்த குழுவினர் தங்களது விஜயத்தின் பெரும் பகுதியை – ஒன்றரை நாட்களை – 36 மணித்தியலாங்களை கழித்திருந்தனர்.

அந்த தருணத்தில் ஏதாவது துருப்புக் கிடைக்காதா என எண்ணி பல தடவைகள் தெலைபேசி இலக்கங்களை அழுத்திய எனக்கு கிடைத்தது கைவலி மட்டுமே. ஆனால், ஒரு பதில் மட்டும் தொடர்ச்சியாக கிடைத்தது “அவர்கள் பார்ட்டியில் இருக்கிறார்கள்”........ என்பதுதான் அது....

இதனை தொடர்ந்து 14 ஆம் திகதி பிற்பகலில் குழுவினர் இந்தியா திரும்பும் வரையிலான காலப்பகுதியல் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தனர். ஆனால் கதைக்கப்பட்ட – பேசப்பட்ட – தீர்மானிக்கப்பட்ட - எந்த ஒரு விடயங்களையும் இந்தியக் குழுவினரோ சம்பந்தப்பட்ட தரப்பினர்களோ ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை.

ஆனால், ஒன்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை நாங்கள் பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, தாயகம் திரும்பியதும் ஊடகங்களுக்கு இடம்பெற்ற சந்திப்புக்கள் தொடர்பாக தெளிவு படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார். இருந்தும் தமிழகக் குழுவினர் இலங்கைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக பல்வேறு நிபந்தனைகளுடனே அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. பொறுத்திருந்து தான் பார்ப்போம் - இன்றைய தினத்தின் பின்னர் ஏதாவது மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்று.......

No comments:

Post a Comment